துவரை - துவரையம்பதி
கவாடபுரம் கழக இருக்கையாக இருந்த குமரிநாட்டுப் பாண்டியப் பேரரசின் கடற்புறத்துத்
தலைநகரம். கதவபுரம் என்னும் கவாடபுரம் (கபாடபுரம்) என்னும் குமரிநாட்டுப் பேரூரின்
நினைவாக எழுப்பப்பெற்றதே வடமதுரையில் கண்ணபிரானின் துவராகை மாநகரம்.
கதவு என்பது வாயில். கவடம்
> கவாடம் என்பது இரட்டைக் கதவம். துவர் என்பது துளை, துளைவெற்ற இடம். துவர் என்பது துளை, துளைபெற்ற இடம், துளைபெற்றது போன்றமைந்துள்ள கோட்டைப்
பெருவாயில். துவர் என்பதற்கு மூலவடிவம் துமர் என்பதாகும். துமர் என்பதன் வேர் தும் என்பதாகும்.
தும்(பு) என்பதிலிருந்தே தும்பி, தூம்பு
முதலான் துளைத்தற் கருத்துவழிப் பிறந்த சொற்கள் வந்தன. தூம்பு என்பது உட்டுளை, உள்துள்ப்புடைய மூங்கில், நீர்செல்லும் பாதை.
சமற்கிருத மொழியில் துவாரசாகை எனில் மடக்குக் கதவு. இஃது இதுவரையில் நாம் எடுத்துக்காட்டிய துவர் என்ற சொல்லுக்குக் கவாடபுரத்துடன் உள்ள வரலாற்று உறவினைத் தெற்றெனத்
திறந்துகாட்டுகின்றது அல்லவா? துவாரபாலகர் என்போர் வாயில்காப்போர் அல்லவா? துவாரபிண்டி என்பது வாசற்படி; துவாரம் என்பது துளை, வழி, வாயில். இவற்றோடு, துவர் என்னும் தமிழ்மூலத்தோடு கலந்துநின்ற வடிவில் துவராபதி என்னும் பெயரே துவாரகையைக் குறிப்பதையும் கூர்ந்து கவனியுங்கள். [ ஆய்வுக்
குறிப்பு:- துவர் >
துவார் என்ற வடிவிலிருந்துதான் ’door’ என்ற மேலைமொழிச் சொல்லும் உருப்பெற்றது. ]
இனி, துமர் என்பதன் வழிப்பிறந்த வடிவமே தமர்.
தமர் எனில் துளை. தமரிடுதல் எனில்
துளையிடுதல் எனப்பொருள்படுகிறது. தமரூசி என்பது துளைப்பதற்கு உதவும் ஊசி. தம் என்னும் வேர்வடிவு தாம் என முதல்நீண்டு வந்த வடிவிலிருந்த உருவான தாம்பு எனும் சொல்லுக்கு, அணையில் நீர்செல்லுமாறு விட்ட வழி என்பது பொருள்.
ஒரு கோட்டை அல்லது கட்டடத்தின் வாயில் பகுதி என்பது
அதனுள்ளே புகுவதற்கு உள்ள வழியாக இருக்கிறது. துமர்(தமர்,
தமரிடுதல் = துளையிடுதல்) என்ற
வடிவம் இடைத்திரிபு பெற்று துவர் என்று வந்த தமிழ்ச்சொல் பெருவாயில் (பெருந்துளை)
எனும் பொருளில் அகை என்ற
பெயர் ஈறு பெற்று ‘துவரகை
> துவாரகை’ என்றாயிற்று.
அதனைச் சுருக்கமாகத் தமிழில் துவரை எனவும் துவரையம்பதி எனவும் அதனைச் சீர்பெற ஆண்ட கண்ணபிரானைத் துவரைக்கோன், துவரைக்கோமான், துவரையர்கோன் எனவும் பண்டைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஆதியில்,
முதற்கழகக் காலத்தில் பாண்டியப் பேரரையத்தின் தலைநகராக இருந்தது தென்மதுரையம்பதி.
அங்கிருந்து புலம்பெயர்ந்த சென்று வடநாட்டில் குடியமர்ந்த தொல்தமிழர் தம்
தொல்தாயகத்தின் நினைவாக இட்ட பெயரே மதுரை. தெற்கே
ஏற்கனவே மதுரை என்ற பெயரில் ஒரு பெருநகரம் இருத்தலால், அவ்வடக்கே எழுப்பப்பெற்ற
மதுரையை வடமதுரை என்று தெற்கத்திய தமிழர்
குறிப்பிட்டனர்.
அதனை அடியொற்றியே இரண்டாங்கழகக் காலத்தில் கோநகராக இருந்த
கவாடபுரத்தின் நினைவாக வடக்கே புலம்பெயர்ந்து போன தமிழமாந்தர் துவரை என்ற
பெயரில் உருவாக்கிய மாநகரமே துவரகை > துவாரகை என்று
பின்னைய சமற்கிருத நூல்களிற் குறிக்கப்படுவதாயிற்று.
No comments:
Post a Comment