கஃசு
> கச்சா
கச்சா எண்ணெய், கச்சாப் பொருள், ... போன்ற சொல்லாட்சிகள்
இன்னமும் தூய்மைசெய்யப் படாத நிலையிலிருக்கும் மூலப்பொருள்களின் நிலையினைக்
குறிக்கும் வழக்காறு பரவலாக உள்ளது.
தூய்மை செய்யப்படாத நிலை என்பது ஒரு
பொருளினுள் சேர்ந்து கிடக்கின்ற பிற பொருள்களை நீக்காத நிலை. அந்த நிலை மாசுடைய
நிலை எனும் கருத்தில்தான் கச்சா எனும் சொல்
முன்னிற்கின்றது.
கசடு எனும் தமிழ்ச்சொல் மிகப் பழைமையானது. அது கசு + அடு எனும் கூட்டமைப்பு உடையது. அதன்
தலைச்சொல் கசு என்பதாக
இருக்கின்றது. கசு என்பது இவ்விடத்து அழுக்கு,
தூயதல்லாத பொருள்நிலை எனப் பொருள்தருகின்றது.
இந்தக் கசு என்பதற்கு உறவுள்ள
மற்றொரு சொல் கஃறு என்பதாகும். கல் + து > கஃறு என்னும்
அமைப்புடையது. கஃறெனல் என்பதற்குக் கறுப்பாதல்,
கறுத்து விளங்குதல் என்று பொருள். அழுக்குக் கருத்துக்கு மூலமான கருமைக்
கருத்து இதிலே பொதிந்து நிற்கின்றதைக் கவனித்து உணர்க.
மற்றொன்று, கச்சளம் என்னும் சொல்.
அதற்கு இருள், கரி, கரிப்புகை என்று பொருள் இருக்கின்றது. கச்சு + அளம்
என்பது அதனுடைய அமைப்புநிலை. கச்சு என்பது கருமைக்
கருத்துப்பொருள் கொண்டு நிற்கின்றது. இந்தக் கச்சு என்னும் வடிவமே கச்சா என்பதற்கும் அடிமுதலாக இருக்கின்றது.
இச் சொல்லினை, வடமொழி, உருது என்று சிலர்
உரிமைப்படுத்துவது பொருந்துமாறில்லை. பய் >
பய்ச்சு > பச்சு > பசு என்று பச்சைநிறம் குறித்த அடிச்சொல்லுக்குத்
தடங்காட்டுவார் சொல்லாய்வுப்
பேரறிஞர் ப. அருளியார் அவர்கள். அதேபோல கய் என்னும் வேரடியைக்
கருமைநிறம் குறித்த அடிச்சொல்லுக்குக் காட்டுவார். அதே தடத்தில் பார்க்கையில், கய் > கய்ச்சு > கச்சு > கசு என்று அமைவதை
அறியலாகும். பசு > பாசு என முதல்நீண்டு
அமைந்த்தைப் போலவே, கசு > காசு என முதல்நீண்ட
வடிவில் தன் கருமைநிறப் பொருளையே உணர்த்துகின்றது.
கய் + அம் >
கயம்
என வந்துள்ள வடிவுக்கு கருமை என்னும் அடிப்படைப்
பொருள்குறிப்பிலிருந்துதான் கரிய நிறம் உடைமையால் கரி எனப் பெயர் பெற்றுள்ள யானையைக் குறிக்கும்
மாற்றுச் சொல்லாகக் கயம் என்ற சொல்
அமைந்துள்ளது. கய் காய் என் முதல்நீட்டம் பெற்ற வடிவிலிருந்துதான் கரிய நிறம் –
கருநீல நிறம் உடையயதாகக் காயா மரத்தில் தோன்றுகின்ற
காயாம்பூவும் பெயர்பெற்றுள்ளது.
கரியநிறத்தவரான திருமாலும் காயாம்பூவண்ணன் என்று
சிறப்புப்பெயர் பெற்றுள்ளதும் இதனை நன்கு தொடர்புறுத்தி விளக்குகின்றது. கய் + அல் > கயல் என வருகின்ற சொல்
கரிய நிறமுள்ள கெண்டைமீன் வகையைக் குறிக்கின்றது. கயவாய்
என்பது
கரிக்குருவியைக் குறிக்கிறது. கயவு என்பதும் கரிக்குருவி எனப் பொருள்குறிப்பதை
ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரிந்துவிடும்.
மேற்படிக் கருமைக் கருத்து கருமையைச் சார்ந்துள்ள இருள், அழுக்கு,
குற்றம் (மாசு) போன்ற கருத்துகளைக் கொண்டுள்ள கய்ச்சு என விரிவுற்ற
வடிவத்திலிருந்து கச்சு என்ற வடிவமும்
உடன்கிளைத்திருக்கின்றது. அந்தக் கச்சு என்பதிலிருந்து
சுருங்கிய நிலையிலே வந்த வடிவமே கசு என்றும் உள்ளது.
இவை அனைத்திலுமே பல தூய தமிழ்ச்சொற்கள் தோன்றி விளங்கிக்கொண்டுள்ளன.
No comments:
Post a Comment