ஒலியெல்லாம்
மொழியாமோ
ஒலியெல்லாம் மொழியல்ல
ஒலியளந்தால்
மொழியாகும்
ஒலியசைந்தால் எழுத்தாகும்
ஒலியிசைந்தால்
சொல்லாகும்! 1
எழுத்தெல்லாம் சொல்விரிக்கும்
சொல்லெல்லாம்
பொருள்குறிக்கும்
எழுத்தோடு சொல்லெல்லாம்
பொருள்குறித்துக்
கருத்துணர்த்தும்! 2
தமிழ்ச்சொல்லே
தமிழ்காட்டும்
தமிழ்ச்சொல்லே
தமிழாக்கம்
தமிழ்ச்சொல்லைக்
கைவிட்டால்
தமிழில்லை
பிறிதாகும்! 3
தமிழ்ச்சொல்லைக்
காப்பதுதான்
தமிழ்தமிழர்
காப்பாமே!
தமிழெழுத்தால்
தமிழ்ச்சொல்லால்
தமிழ்ப்பொருளைக்
காப்போமே! 4
தலைமுறைக்குத் தலைமுறையே
தமிழ்கொடுத்துத்
தமிழாக்கும்!
தலைமுறைக்குத் தலைமுறையே
தமிழ்படித்துத் தமிழாவாய்! 5


No comments:
Post a Comment