Saturday, July 13, 2013





                    விரும்பி விரும்பி விட்டோம்
                    விட்டு விட்டு விரும்பினோம்


விரும்பி விரும்பி விட்டோம்
விட்டு விட்டு விரும்பினோம்
விரும்பல் விடுதல் இரண்டும்
      விட்டோம் வீடு பெற்றோம்

விருப்பமாய் இருந்தது பின்னர்
      வெறுப்பாய் போனது பின்னும்
விருப்பமாய் பூத்ததும் வேண்டா
      வெறுப்பாய்ப் போனது போனதே

விருப்பம் இல்லை யானால்
      விளக்கம் வருவ தில்லை
வெறுப்புதான் இல்லை யானால்
      மேற்படி ஏறல் இல்லை

இருந்த படிஇருந் துவிட்டால்
      இல்லை படிநிலை வளர்ச்சி
இருந்த படிஇருந் துவிட்டால்
      இல்லை பிறப்பிறப் பில்லை

திருந்தல் திருப்பம் பெறுதல்
      திருந்தத் திருந்த நிலைபெறல்
வருந்தல் வருத்தப் படுதல்
      வருந்த வருந்த கலைபெறல்

நிலைக்கு நிலைஉளம் பெயர்தல்
      நிலைபெற வாய்த்திடும் பெயர்ச்சி
நிலைக்கு நிலைஉளம் தெளிதல்
      நிலைபெற உய்த்திடும் பயிற்சி

பெயரும் இடைநிலை உள்ளது
      பேரும் இயற்கை என்பது
பெயராப் பெருநிலை உள்ளது
      பேரா இயற்கை என்பது

பெயரா நிலைகட வுள்நிலை
      பெயரும் நிலைவினை படுநிலை

பெயரா நிலைக்குப் பெயர்ந்திடும்
      பெயர்ச்சி நிலைகளே பிறவிகள்

அரும்பி அரும்பிச் செத்தோம்
      செத்துச் செத்தும் அரும்பினோம்
திரும்பித் திரும்பி நோக்கினோம்
திருந்தும் நோக்கம் நோக்கினோம்

விருப்பில் வெறுப்பில் நடுவில்
      வினைபடு நிலையொரு கருவி
பிறப்பில் இறப்பில் பிறங்கிப்
      பிறங்கி ஆடிய அருவி

வினைவழி பதிவுறும் அறிவும்
      இன்ப துன்ப உணர்வும்
துணைபெற ஒருவடி வாகும்
      உள்ளொளி விளக்கம் ஆகும்

வினைபடா வரையில் அறிவென
      எதுவுமே பதிவுறல் இல்லை
வினைபட அறிவுறும் அறிவுற
      விலகிடும் அறியா மைகளும்

இருவினை கிடந்துபின் கடந்த
      நிலைவரும் நிலைவர நிலைவர
இருவினை ஒப்பால் வினைகெடும்
      இறைநிலை உயிர்நிலை புலப்படும்

நெருப்பில் இரும்பு சேர்ந்தால்
      நெருப்பின் வண்ணமாய் நிற்கும்   
நெருப்பும் இரும்பும் வேறாய்
      இராமல் இரண்டற் றிருக்கும்

பிறப்பில் இறப்பில் கடந்து
      பிறவா இறவா நிலையும்
சிறப்பெனும் செம்பொருள் நிலையாய்
      சேர்வது செறிவது நிலையே 



No comments:

Post a Comment